This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

18 ஜூன், 2009

வஞ்சிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்! -கிழக்கான் ஆதம்-

தான்டி வந்தேன் கடலை!, வாங்குவேன் உன் உடலை!, அணிவேன் மலையாய் - உன் குடலை!, அனுப்புவேன் சுடலை, - ஆனால் என்- முருகன் கட்டளை இடலை!, அதனால் நான் உன்னைத் தொடலை!

பழைய படமொன்றில் நடிகர் சிவாஜி கணேசன் பேசிய வரிகள் இவை இன்றைய நாட்களில் பல சூடான கருத்தாடல்கள் எமது இணையத்தளங்கள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. என்றும் இவைகளைக் கண்டு நாங்கள் சளைக்கப்போவதில்லை. காரணம் இவர்களை விட சூடும் கோபமும் இவர்களைக் குறித்தும் புலிகளைக் குறித்தும் நியாயமாக எமக்குத்தான் எழ வேண்டும். காரணம் இவர்களால் வாழ்கையை இழந்தவர்கள் நாங்கள்தான்! இன்றைய இளைஞர்கள்.
புலிகளின் பாசிசப் போக்காலும் அதன் ஆதரவாளர்களின் வரட்டு வாதத்தாலும் வாழ்கையை தொலைத்தவர்கள் நாங்கள்தான் நியாயமாக நாங்கள்தான் கோபப்பட வேண்டும். என்றாலும் கோபம் மட்டுமே படத்தெரிந்ததால் அவர்கள் கோபப்படுகிறார்கள். நாலு வழிகளும் எங்களுக்குத் தெரிந்ததால் இவர்களின் ஐம்பது வயது முதிர்ச்சியை ஒரு பத்துவயது அனுபவம் உடைத்து சுக்குநூறாக்கிவிட்டு அமைதியாய் இருக்கிறது. இலங்கையின் ஆட்சிப் பீடத்தில்.

இவர்கள் ஆயுதப் போராட்டம் என்று புறப்பட்டு அவர்கள் நினைத்ததையெல்லாம் செய்ததால் நாங்கள் இழந்து கொஞ்சநஞ்சமல்ல.

சிறு வயதில் விளையாட்டைத் தொலைத்தோம்! ஆறு வயதுக்குமேல் கல்வியைத் தொலைத்தோம், டீன் ஏஜில் காதலைத் தொலைத்தோம், ஊரில் வீட்டைத் தொலைத்தோம், பல சொந்தங்களைத் தொலைத்தோம், புகை வண்டியில் பிரயாணித்த ஆசிரியர்களைத் தொலைத்தோம், பள்ளியில் தொழுத சகோதரர்கள் நண்பர்களைத் தொலைத்தோம், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாயைத் தொலைத்தோம், சகோதரிகளைத் தொலைத்தோம், டீயூசனுக்குச் சென்ற நண்பியைத் தொலைத்தோம் இவ்வாறு இழந்தது எல்லாம் எங்கள் ஜெனரேசன்தானே!

ஆகவே நாங்கள் தற்போது புதுயுகம் படைக்கப் புறப்பட்டபோது அவர்களின் வரட்டு சிந்தனையையும் நாங்கள் சிறுவயதில் அனுபவித்ததால் எங்களின் இளவயது சிந்தனை அவர்களை திண்டாடவைக்கிறது! இன்னும் வைக்கும்! காரணம்

வாழ்கையைத் தொலைத்தவர்கள் நாங்கள்தான்! வலி எங்களுக்குத்தான் தெரியும்!.

ஐந்து வயதில் வீதியோரத்தில் கால்பந்து விளையாடும்போது வந்து “இயக்கம்” என்று சொல்லி பாலகர்களாகிய எங்களை தென்னை மரத்தை கட்டிபிடிக்கச் சொல்லி நாங்கள் அணிந்திருந்த களிசனைக் கழற்றிவிட்டு பின்புறத்தில் அவர்களால் ஏன்ட மட்டும் அடித்தார்களே அப்போது நீங்கள் ஏன் தடுத்து நிறுத்தவில்லை! உங்களில் மனித உரிமை வாதிகள் எங்கே இருந்தீர்கள்? எங்கள் விளையாடும் சுதந்திரத்தை மீட்டுத் தந்தீர்களா? அன்று வாங்கிய அந்தப் பந்து இன்றும் என் வீட்டில் விளையாடாமல் விதவையாய் இருக்கிறதே! அன்று நாங்கள் அதை வாங்கச் சேர்த்த அந்த பதினைத்து ரூபாயின் மதிப்பினை உங்களின் கோடி பவுண்களால் ஈடு செய்ய முடியுமா? அந்தப் பதினைந்து ரூபாய்க்காக எத்தனை பாடசாலை காலத்து மதியநேரங்கள் பட்டினியில் கழிந்தன! இழந்தது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!

அன்று எங்கள் பந்துகளை நீங்கள் விதவையாக்காமல் விட்டிருந்தால்! இன்று நாங்கள் உழைத்து லெப்டொப் வாங்கியிருக்க மாட்டோம்! நீங்கள் பலகோடிப் பவுன்களுக்கு ஆயுதம் வாங்கிக்கொண்டிருக்க நாங்கள் வெறும் ஐநூறு பவுனுக்கு வாங்கியது உங்களுக்கு எவ்வளவு தலையிடியாயிருக்கிறது! திருந்துங்கள்! ஜனநாயக வழிக்கு வாருங்கள்!

வஞ்சிக்கப்பட்டது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!

நீங்கள் விளையாடிய விளையாட்டுக்களை நாங்கள் விளையாடக் கூடாது என்று பொறாமையா? அல்லது நீங்கள் அப்படி விளையாடினோம்! இப்படி விளையாடினோம்! என்று பழைய கதை சொல்லிப் பெருமையடிக்க நாங்கள் மட்டும் கூட்டுக்குள் வாழும் கோழிகளாக கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தோமே!!! அந்த வீராப்பா? அதனால்தான் எனது தம்பிகளுக்கு நாங்கள் இழந்ததை மீட்டக் கொடுக்க லெப்டோப்புடன் அலைகிறோம்... இது சுயநலவாதமல்ல ஜனநாயகவாதம்.

இழந்தது நாங்கள்தான்! வலி எங்களுக்குத்தான் தெரியும்!

பாடசாலையில் செய்த குறும்புகள் சொல்லி நீங்கள் படித்த ஆங்கிலத்தில் வசனங்கள் பேசி நீங்கள் அரசியல் ஆயுதம் எனப் போராட்டம் செய்து கொண்டிருக்கும் போது! அரசுதந்த துணியில் சீருடையைத் தைத்து மாற்றுடைக்கு வழியில்லாமல் பாடசாலை சென்று பாடசாலை ஆரம்பித்த அரைமணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பூட்டப்பட்டதாக திருப்பியனுப்பப் பட்டோமே! அப்போது உங்கள் இத்துப்போண ஆங்கிலத்தால் எங்களை குறைதானே சொன்னீர்கள்! உங்கள் புரட்சியை மாற்றி எங்கள் வளர்ச்சிக்கு வழியமைக்கவில்லையே! எனவேதான் நாங்கள் இழந்ததை எங்கள் தம்பிகளுக்கு மீட்டுக் கொடுக்கப் போகிறோம்.

வஞ்சிக்கப்பட்டது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!.

பருவ வயதில் நீங்கள் செய்த காதல் குறும்புகளை எங்கள் அம்மம்மா சொல்ல அப்படியே ஒரு மன்மதச் சிரிப்பு சிரித்துவிட்டு உங்கள் காதல்கதைகளுக்கு பக்கவாத்தியம் இசைத்தீர்களே! நாங்கள் வீதிகளில் கூட சுதந்திரமாக செல்ல முடியவில்லையே! எங்களுக்கு காதல் என்பது கதையாகத்தானே இருந்தது! காதல் என்றால் திரைப்படம் என்று தப்பாக நினைத்தோமே! எங்களின் எதிர்கால மீட்சிக்காக என்ன செய்தீர்கள்! சமாதான காலத்திலாவது ஒரு சதிலீலாவதியைப் பார்க்கமுடியவில்லையே! துடுக்காய் வந்து அலேக்காய் தூக்கிச்சென்றார்களே பயிற்சிக்காய்! தப்பென்று ஒரு கிறுக்கெலேனும் கிறுக்கவில்லையே நீங்கள்!

இழந்தது நாங்கள்தான்! வலி எங்களுக்குத்தான் தெரியும்!.

சினிமாத் தியேட்டரில் இரண்டு ரூபா டிக்கெட்டில் செக்கென் சோ பார்த்த கதைகள் சொல்லி வாத்தியார் ஸ்டைலில் சேட்டும் ரவுஸரும் போட்டு அதனைப் போட்டோக்களாக காட்டினீர்களே! மாற்றுத் துணிக்கு வழியில்லாமல்தானே எங்கள் டீன் ஏஜ் கழிந்தது! எங்களுக்கு ஒரு சினிமாப் பார்க்கவாவது வழிகாட்டினீர்களா?

தியேட்டரை நாங்கள் கண்ட கதை தெரியுமா?

இராணுவ வீதிப்பாதுகாப்பில் கிழமைக்கு ஒரு தரம் மட்டக்களப்புக்கு டீயூசனுக்குப் போகும் வழியில் தியேட்டர்களை கண்டோம் மூடி ஒட்டுரை பிடித்துக் கிடந்ததே! பார்த்துப் பார்த்து பெரு மூச்சுடன் வந்தோமே! வாழ்கையில் இளமை உங்களுக்கு மட்டும்தானா? இழந்தது நாங்கள்தான்! எனவே நாங்கள் உங்களிடம் கதையாக கேட்ட சுகங்களை எங்கள் தம்பிகளுக்கு நிஜமாகக் கொடுக்கப் போகிறோம்!

வஞ்சிக்கப்பட்டது நாங்கள்தான்! வலி எங்களுக்குத்தான் தெரியும்!

வயலுக்குச் சென்று அறுவடை செய்து கைக்குத்தரிசி ஆக்கி, வேட்டைக்குச் சென்று முயலை வேட்டையாடி தயிரும் வடித்து நெய்யில் வதக்கி சாப்பிட்ட கதைகள் நீங்கள் வரிவிரியாகச் சொல்லும்போதுதான் நாங்கள் அம்மா அவித்த சோற்றுக்கு வைத்துத்தர கறியின்றி தண்ணீர் ஊற்றி உப்புப்போட்டுத் சாப்பிட்டுவிட்டு கொட்டாவி விட்டோமே! எங்கள் மீட்சிக்கு என்ன செய்தீர்கள்!

நீங்கள் படித்த பொருளாதாரமும் உங்கள் அரசியலும் ஆயுத போராட்டமும் எங்களுக்கு எத்தனைவேளை உணவளித்தது? அம்மாவிடம் பசி தாங்க முடியாமல் உருண்டு உருண்டு அழுதோமே! குழந்தை அழுவது தாக்காமல் அவளும் அழுதாளே! அப்போது எங்கே இருந்தது உங்கள் பொருளாதாரச் சித்தார்தங்கள்! சேகரிக்கப்பட்ட பணங்கள்! உங்களின் தொண்டர் அமைப்புக்கள்! இப்போது மட்டும் உப்புக்குச் சப்பையாக ஊலையிடுகிறீர்களே!

இழந்தது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!

யாழ்பாணத்தில் நூல் விட்டு கண்டியில் கடலை போட்டு கொழும்பில் நீங்கள் ஒதுங்கிய கதைகளை உங்கள் நண்பர்கள் சொல்ல “ஆ”வென்று ரசித்தோமோ! உணர்வுகள் உங்களுக்கு மட்டும்தானா? நாங்கள் என்ன கல்லால் வடிக்கப்பட்டவர்களா?

எங்கள் பெண்டுகளை மட்டும் கடவுள் போராடப் படைத்தாரா? அந்தப் பெண்களின் மீட்சிக்காக என்ன செய்தீர்கள்? ஒரு தரம் கடலைபோடவேனும் எங்களுக்கு சுதந்திரம் இருந்ததா? கடலை போட வந்தவனிடம் கைத்துப்பாக்கியை கொடுத்தார்களே இது நியாயமா? தட்டிக் கேட்டீர்களா? புலம்பெயர் தேசங்களில் நீங்கள் கிளப்பில் இருந்து கொண்டல்லவா இதை அமோதித்தீர்கள்!

வஞ்சிக்கப்பட்டது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!

வீட்டுக்குள் கரன்ட் இல்லை, வீதி விளக்கும் எரியவில்லை, அம்மாவிடம் விளக்கெரிக்க மண்ணென்னையில்லை! பாடசாலையில் கல்வியில்லை! கொழும்புக்கு சென்ற வகுப்பாசிரியர் இன்னும் ஊர் திரும்பவில்லை! கணக்குப்பாடம் படித்துத் தந்த கணவதிப்பிள்ளை துரோகியாகியதால் வகுப்பு வரவில்லை! போனா நண்பி சரஸ்வதியின் கடிதம் சில ஆண்டுகளாக இல்லை தேடிச் சென்றால் அப்படியொரு ஊரே மெப்பில் இல்லை! எங்கள் படிப்பையும் பிறப்பையும் குற்றம் சொல்கிறீர்களே! எங்கள் மீட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் யார்? உங்களை நாங்கள் இப்போது ஏற்றுக் கொள்ள?

அரசு நாங்கள் படிப்பதற்காக மின்சாரம் வழங்க போட்ட ரான்ஸ்போமரை புலிகள் உடைத்தபோது ஊமையாக இருந்தீர்கள்! நாங்கள் விளக்கில் படிப்பதற்காகவாவது மண்னெண்னை எடுத்துவந்த வௌச்சரை புலிகள் கடத்தியபோது கண்டும் காணாதிருந்தீர்கள்! பாடசாலை ஆசிரியர்கள் வழிமறித்துக் கொல்லப்பட்டபோது வாயே திறக்கவில்லை! எங்களை ஊர்களை விட்டுத் துரத்தியபோது “தூ” மனிதன் செய்யும் செயலா! என நீங்கள் இகழவில்லை! இன்று மட்டும் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது தன்மானம்!

இழந்தது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!.

அண்ணா! அண்ணா! என்று வாய்நிறைய மதபேதத்துக்கப்பாள் அழைத்து என்னை கண்டதும் ஓடிவந்து உள்ளே அழைத்துச் செல்வாளே அந்தச் சகோதரி! அவள் பதினைந்து மாதங்களுக்கு முன்னால்தானே தான் பல வருடங்கள் பார்க்காத தாயைப் பார்க்க இலங்கை சென்றாள்.

(உங்களின் பாசையில்) இனவெறி இராணுவத்திடமிருந்து தப்பித்து அனுமதியைப் பெற்று யாழ்பாணம் சென்று அக்காவுடன் தங்கமுடிந்தது அவளால்! ஆனால் முல்லைத்தீவுக்கு தாயைப்பார்க்கச் சென்ற அவளால் (இன விடுதலைக்காகப் போராடிய) பாசிசப் புலிகளிடமிருந்து தப்பித்து வரமுடியவில்லையே! இப்படிப்பட்ட அவளைகளை மீட்க எந்த பாசிச அரசியல்வாதி குரல் கொடுத்தீர்கள்? எந்த நிதிப்பொறுப்பாளர் கண்டித்தீர்கள்? எந்த சர்வதேசப் பேச்சாளர் விடுவிக்கக் கோருனீர்கள்? எந்தத் தமிழ் அரங்கள் செய்தி வெளியிட்டது?

உடைகள் நீக்கிய பிணங்களின் மத்தியில் அவளின் முகத்தைத்தானே கண்கள் தேடுகின்றன! ஒரு சகோதரியை இழந்துவிட்டோம்! இன்னோர் சகோதரியை இழக்க மாட்டோம்!

வஞ்சிக்கப்பட்டது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!

உங்கள் தலைவர் மாவீரர் உரையில் என்ன சொன்னார் “தமிழீழம் தமிழ், முஸ்லீம் இரண்டு இனங்களுக்கும் சொந்தம்” என்றாரே! காசீம் காகா ஹஜ்ஜூக்குச் சென்று திரும்பி விட்டேன் கொழும்பில் புத்தகம் உனக்கு வாங்கி வருகிறேன் என்று கொழும்பிலிருந்து டெலிபோனில் சொன்னாரே எனக்கு பத்துவயதில் புத்தகம் வாங்கிக்கொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்ட அந்த நல்ல உள்ளம் இன்னும் ஊருக்கு வரவில்லையே! உங்கள் தமிழீழத்தில் புனித யாத்திரை குற்றமா?

தம்பி! தம்பியென அழைத்து காசு வாங்காமல் எனது ஓட்டச் சைக்கிலை பழுதுபார்த்து தருவாரே ஈரோஸ் மோகன் அண்ணா! கடை மூடி வீடு சென்ற அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே!

உங்களைப் போன்று அவரும் தமிழரைப் பாதுகாக்கத்தானே போராட்டத்தில் குதித்தார் நீங்கள் பாசிசத்துக்கு மாறியபோது வேண்டாம் என ஒதுங்கி உழைத்துச் சாப்பிட்டார்! உங்களைப் போன்று கலக்சனில் சாப்பிடாது உழைத்துச் சாப்பிட்டது குற்றமா?

எனது ஓட்டைச் சைக்கில் இன்றும் அப்படியே பழுதுபார்க்க யாருமில்லாமல் அனாதையாகக் கிடக்கிறதே! பணம் வாங்காமல் உங்களால் பழுதுபார்த்துத் தர முடியுமா?

இழந்தது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!

மனித உரிமையியல் வாதி ராஜினி திரணகமையை போட்டுத் தள்ளிவிட்டு மனித உரிமை மீறப்படுவதாகக் கூக்குரல்! அல்பிரட் துரையப்பாவை போட்டுவிட்டு அரசியல்வாதிகள் மிரட்டப்படுவதாகக் கூக்குரல்! நீலன் திருச்செல்வத்தை போட்டுவிட்டு கல்விமான்கள் களையெடுக்கப்படுவதாகக் கூக்குரல்! ஏறாவூரில் தூங்கிக் கொண்டிருந்த மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு இன அழிப்புச் செய்வதாகக் கூக்குரல்! யாழ்பாண மன்னார் முஸ்லீம்களை விரட்டிவிட்டு நில ஆக்கிரமிப்புப் செய்யப்படுவதாகக் கூக்குரல்! கொக்கட்டிச் சோலையில் பூசகரைக் போட்டுவிட்டு மதம் அழிக்கப்படுவதாகக் கூக்குரல்! கட்டாரில் ஆள் அனுப்பிக் கொலை செய்துவிட்டு ஸ்டேட் டெரரிஸம் என்று கூக்குரல்! நோர்வேயில் எம்பஸியை உடைத்துவிட்டு மனித உரிமைகோரிக் கூக்குரல்! முடியல ஐயா! முடியல! புரியல உங்கள் கோஷமும் வேஷமும்.

ஐயா! புத்திசாலிகளே! எந்தப் பாடசாலையில் ஐயா நீங்கள் படித்தீர்கள்? கொஞ்சம் பெயரைச் சொல்லுங்கள் நீங்கள் படித்த சட்டம், நீதி, நிர்வாகம், மனித உரிமை,பொருளாதாரம், அரசியலை நாங்களும் படிக்க ஆசையாக உள்ளது ஐயா!

கோஷம் போடச் சொன்னீர்கள் போட்டோம்! போஸ்டர் ஒட்டச் சொன்னீர்கள் ஒட்டினோம்! நாங்கள் அரசியலில் மாமேதைகள் என்றீர்கள் நம்பினோம்! வாக்குபோட வேண்டாம் என்றீர்கள் கட்டுப்பட்டோம்! ஒரு நேரத்துக்காவது சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் மூலையில் சுருண்டுகொண்டு கிடந்த எங்களை அகதிகளாக தடை முகாம்களில் வைத்துவிட்டீர்களே!

வஞ்சிக்கப்பட்டது நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்!

இனியாவது உங்கள் பட்டுக்கோட்டைப் பிரகடணத்தையும், தமிழீழ பிரகடணத்தையும் விட்டுவிட்டு அரசியலிலிருந்து ஒதுங்குங்கள்! காரணம் உங்களுக்கு போரினவாதத்தைச் சமாளிக்க இருபதாயிரம் எங்கள் அப்பாவி இளைஞர் உயிர்களும், கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆயுதங்களும், உல்லாச நீர் தடாகங்களும், புலம்பெயர் தேசங்களில் போராடங்களும், இந்தியாவில் தீக்குளிப்புக்களும், அகதியாய் வாழ மீண்டும் பல இலட்சம் மக்களும், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமும் வேண்டும்!.

நீங்கள் குட்டிக் குட்டி குத்துக்கரணமடித்து அடக்கி வளர்த்ததால் நாங்கள் கூட்டுக்குள் புழுவாகப் பிறந்தாலும் உங்கள் அடக்கு முறையால் பறக்கும் பூச்சாக மாறிவிட்டோம்! எங்களுக்கு பேரினவாதத்தைச் சமாளிக்க பேனா, பென்சில், அழி இரப்பர் போதும்! மேலதிக தகமையாக கையில் லேப்டொபும் உண்டு ஐ.நாவுக்கு நாங்கள் அலோசனை வழங்குவோம்!

உங்கள் பிரித்தானிய ஆங்கிலமும், வட்டுக்கோட்டை அரசியலும், மட்டக்களப்பு அனுபவமும், யாழ்பாணக் கோட்டை வரலாறும் செய்ய முடியாததை நாங்கள் செய்து காட்டுகிறோம் பாருங்கள்! இனி உங்கள் தோற்றுப்போன கதைகளை அளக்காதீர்கள்! எங்களைப் படியுங்கள்! விமோச்சனம் பெறுவீர்கள்!

முடிந்தால் எங்கள் வளர்ச்சியை கண்டு வாய்பிளக்காமல் கொஞ்சம் இறங்கி வந்து சிறுவர் இலக்கிய வெளியீடுகளில் சிறுவர் நீதிக் கதைகள் என்று புத்தகங்கள் உண்டு வாங்கிப் படித்துப் பாருங்கள்!. நீங்கள் புத்தி படிக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

மன்னிக்கவும்! படிக்கத் தெரியாததால்தானே நீங்கள் அடிக்கப் பலகினீர்கள்! இனி கேட்கவாவது பலகுங்கள் உங்கள் கேடுகளுக்குப் பிராயச்சித்தமாக அமையும்.

உங்கள் சுத்துமாத்துக்களையும் பிரச்சாரங்களையும் பொய்களையும் தோழுறிக்க இராணுவ ஆய்வாளர்களும், இராணுப் பேச்சாளர்களும், படித்த மேதைகளும் தேவையில்லை. உங்கள் பக்கத்து வீட்டு குட்டி பாபு நேசரியில் படிக்கிறான் அவனைக் கூப்பிட்டுக் கேளுங்கள் அப்படியே புட்டுப் புட்டு வைப்பான் காரணம் இன்றைய தலைமுறை படிப்பது நியூ செலபஸ்.

"விரும்பியேற்றால் சுவர்க்கம்! அதே திணிக்கப்பட்டால் நரகம்".

09-06-2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக