“செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று” -முதுமொழிக் காஞ்சி-

“செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று” -முதுமொழிக் காஞ்சி-
“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான், பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான், பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்- இதில் எவ்வித சந்தேகமில்லை. எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்”
அல்-குர்ஆன்-ஸூரத்துல் ஜாஸியா (45:26)
இக்கால கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இருந்த எழுச்சி ஆயுதரீதியாக போராட வேண்டும் என்ற உணர்வில் உந்தப்பட்ட அனைவரும் இன, மத பேதமின்றி வடக்கில் உள்ள தலைவர்களால் அமைக்கப்பட்ட விடுதலைப் போராட்டக் குழுக்களுடன் தங்களையும் இணைத்துக் கொண்டனர். அக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த தீர்க்க தரிசனமான அரசியல் சாணக்கியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகள் இதனைக் கண்டித்தனர். பொது மேடைகளில் இவ்வாறான போராட்டங்கள் பயனளிக்க கூடிய வகையில் அது பயனிக்கவில்லை என்றும் பிரச்சாரங்கள் இடம்பெற்றன.
இவ்வாறான காலகட்டத்தில் அப்போதைய அரசியல் தலைவர்கள் முதல் மதத் தலைவர்கள் வரை அனைவரும் ஆயுத ரீதியான போராட்டமானது முஸ்லீம் சமூகத்தை அழித்துவிடும் என்ற தங்களின் தீர்க்க தரிசனமான நிலையை இளைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பாரிடம் வலிமையாக முன்வைத்தனர். அத்துடன் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் இணைந்து செயற்படுவது முஸ்லீம் சமூகத்தால் அங்கிகரிக்கப் படாமையால் அந்த இளைஞர்கள் இவ்வாறான போராட்டங்களில் அதிகமாக இணைந்து செயற்படுவது காலப்போக்கில் குறைக்கப்பட்டது.
மட்டுமல்லாது தமிழர் போராட்ட அமைப்புக்கள் தங்களுக்குள் மோதல்களில் ஈடுபட்டு வந்ததும் முஸ்லீம்கள் இளைஞர்கள் இந்த இயக்கங்களில் இருந்து வெளியேற காரணமாக இருந்தது. மேலும் இயக்கம்களில் பெயர் சொல்லக்கூடிய பல இளைஞர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்துவந்தனர் என்றாலும் பின்னாட்களில் அவ்வாறானவர்களில் புலிகளுடன் செயற்பட்ட பலர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
முஸ்லீங்கள் தனது இயக்கத்தில் இணைத்து செயற்படுவதை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன்பாடில்லாதவராக இருந்தார். பின்னாட்களில் இந்த பிழை தங்களுக்கு எதிர் காலத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுபடுத்தும் என்ற உணர்வுடன் முஸ்லீங்களை இயக்கத்தில் இணைத்து அவர்களுக்கு முஸ்லீம் பகுதிகளில் பொறுப்பாளர் பதவிகள் வழங்கி அவர்களை கவர ஒரு காலத்தில் புலிகள் இயக்கம் முற்பட்டது.
அத்தகைய சந்தர்பங்களிலெல்லாம் அத்தகைய முஸ்லீம் சமூகத்தை சார்ந்த புலி இயக்க உறுப்பினர்களை முஸ்லீம் சமூகம் அங்கீகரிக்க மறுத்தபோது கோபமடைந்த பிரபாகரன் முஸ்லீம்களை தங்கள் தாயக பிரதேசங்களை விட்டு துடைத்தெறிந்து விட்டு தனி இராச்சியம் அமைக்கலாம் என தீர்மானித்து முஸ்லீம்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை இற்றைவரை தொடர்கின்றது.
இவ்வாறான புலிகளின் முஸ்லீம்களுக்கெதிரான செயற்பாடே இஸ்லாமியர்கள் தங்களை தனியான இனமாக அடயாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எழுச்சியை உருவாக்க உதவியது. இந்த காலங்களில் முஸ்லீம்கள் மீது புலிகளால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடாத்தப் பட்டபோது கேட்பாரற்று கிடந்த இந்த சமூதாயம் தங்களின் சமூகத்தில் இடைவெளியாக இருந்த இடங்களை நிரப்ப முற்பட்டது.
தனி வியாபார சமூகமாக இருந்த முஸ்லீம் சமூகம் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொண்டது மட்டுமல்லாது அரசியலில் புதிய பாதைகளை திறந்து பயனித்தது. இதனால் புலிகள் பின்னாளில் மிகவும் காத்திரமான எதிரலையை இஸ்லாமிய சமூகத்தினால் எதிர்கொண்டனர்.
மேலும் முஸ்லீம்களின் கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுடன் அவர்கள் சொந்த நிலங்களை விட்டு விரட்டப்பட்டபோதும் உயிர் கேள்விக் குறியாக்கப் பட்டபோதும் மிகவும் துணிச்சலாக சொந்த நாட்டில் இருந்து செயற்பட்டதானது காலப்போக்கில் காத்திரமான ஒரு சமூக அமைப்பைப் தோற்றுவித்தது.
இந்த இடத்தில் தமிழர்கள் மிகவும் பாரிய தவறொன்றைச் செய்தனர் அது அவர்களில் அதிகளவானவர்கள் புலம்பெயர்ந்து சென்றதாகும். தமிழர்களில் இருந்த பெரும்பாலன புத்தி ஜீவிகள் மற்றும் படித்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றபோது அவர்கள் வகித்த பதவிகள் மற்றும் அவர்கள் தங்களால் இலங்கையில் கட்டிக் காத்துவந்த பெருமைகள் மற்றும் உயர் அரச பதவிகளும் அரசியல் கதிரைகளும் சிங்களவர்களாலும் சில இடங்கள் முஸ்லீம்களாலும் நிரப்பப்பட்டன. ஆகவே தமிழர்கள் நிலை இலங்கையில் இன்னும் பரிதாபத்துக்குரியதாக சென்று கொண்டிருப்பதை உணராமல் அவர்கள் புலம்பெயர்ந்து சென்றதானது அவர்களுக்கு இலங்கை மண்ணில் இருந்த உரிமையை அவர்களே மறுப்பதைப்போல அமைந்தது. மற்றுமல்லாது சிங்கள அரசாங்கங்கள் தங்களுக்கு வாய்பாக அனைத்தையும் தன்னகத்தே மாற்றிக்கொள்ள வழிசமைத்தது.
இலங்கை வாழ் தமிழர்கள் புலம் பெயரத் தலைப்பட்டபோது பெரும்பாண்மை சமூகத்தினர் மிகவும் சந்தோசம் அடைந்தனர் காரணம் அவர்கள் மீண்டும் மீள்வது முயற்கொம்பு என்பது அவர்களுக்குத் தெரியும். தமிழர்கள் தங்களின் தலைமீது தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டனர். என்பதுடன் தமிழர்கள் புலம்பெயர்ந்த இடைவெளியால் அவர்களின் உரிமைகள் இலங்கையில் படிப்படியாக கேள்விக் குறியாக்கப்பட்டது.
இரண்டாவது மிகப் பெரும் தவறாக தாங்கள் முன்னெடுத்த ஆயுத போராட்டத்தை தங்களுக்கானதாக மட்டும் மட்டுப் படுத்திக்கொண்டதும் மிக நீண்ட காலத்திற்கு அதனை இழுத்துச் சென்றதையும் குறிப்பிடலாம். காரணம் மனித குல வரலாற்றை நோக்கும் போது மூன்று தாசாப்தங்கள் என்பது மனித வாழ்விலும் மானிட வளர்ச்சியிலும பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. நீண்டகாலமாக போராட்டம் தொடரப்படும் போது அந்தப் போராட்ட சிந்தனை நாகரீக வளர்சியினால் அந்த சமூகத்தால் சிதைக்கப் பட்டுவிடுவது சாத்தியமானதொன்றாகும்.
அத்துடன் பலம்மிக்க தமிழர்களில் ஒரு பெரும்பகுதி புலம்பெயர்ந்து சென்றுவிட போராட்டம் நீண்டதாக அமைவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் காரணம் அந்த போராட்டத்தில் இணைந்து செயற்பட அம்மக்கள் நிச்சயம் மறுப்புத் தெரிவிப்பர் மட்டுமல்லாது காலம் செல்லச் செல்ல ஆரம்பித்த காலத்தைவிட கூட இருந்து போராடும் போராளிகள் குறைந்து கொண்டே செல்வர் இத்தகைய சூழலில் அந்தப் போராட்டம் தோல்வியை தழுவுவதை யாரும் தடுக்க முடியாது.
இதே நிலையில் தமிழர்கள் புலம்பெயராமல் அந்த நாட்டுக்குள்ளேயே தங்களின் உரிமைகளுக்காக போராடியிருப்பார்களானால் அரசியலிலும் மற்றும் சகல துறைகளிலும் காலப்போக்கில் வளர்ச்சிப் போக்கே காணப் பட்டிருக்கும் அத்துடன் போராட்டத்தின் வலுவும் இணையும்போது தமிழர்களுக்கான தாயகம் தானாக அமைந்திருக்கும் எனபதே உண்மை.
இந்தத் தவறை முஸ்லீம் சமூகமும் செய்ய முற்பட்டபோது அங்கிருந்த புத்திஜீவிகளால் அது தடுக்கப்பட்டது மட்டுமல்லாது தங்கள் நாட்டை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது என பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டது இதன் காரணமாக முஸ்லீம்கள் இலங்கை அரசியலில் காலப் போக்கில் அதிக வளர்ச்சி கண்டனர் என்பதுடன் பேரம் பேசும் சக்தியாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர்.
இவ்வாறான ஒரு வளர்ச்சி இல்லாதிருப்பின் அரசியல் ரீதியாக பெரும்பான்மை இனத்தைவிட சகல துறைகளிலும் பலமாக இருந்த தமிழ் சமூகத்தையே அங்கீகரிக்க மறுத்த பெரும்பாண்மை ஆட்சியாளர்களின் பிடியில் முஸ்லீம்கள் ஒரே நொடியில் நசுக்கப்பட்டிருப்பர். தமிழர்கள் புலம் பெயர்ந்து சென்றது முஸ்லீம்கள் தங்களை மீளமைத்துக் கொண்டதும் முஸ்லீம்களை பலமான சக்தியாக மாற்றியது.
இன்று அரசியலில் தொடங்கி சகல துறைகளிலும் தமிழ் தரப்புக்கு நிகரான நிலையில் இலங்கையில் முஸ்லீம்கள் இடம்பிடித்துள்ளனர். இது ஒரு குறித்த பிரதேசத்தை சேர்ந்த சமூகம் விழித்துக் கொண்டதன் விளைவாக முழு முஸ்லீம் சமூகத்திலும் வழிப்புணர்ச்சியை உருவாக்கியது.
இத்தகைய மீளமைக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தைக் கொண்ட ஒரு சூழலில்தான் தற்போது தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற ஒன்று முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே இத்தகைய தருணத்தில் தமிழ் பேசும் தரப்பாரில் ஒரு சாரார் புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு நாட்டில் வாழும் தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து பழைய அரசியல் முன்மொழிவுகளின் அடிப்படையில் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற கருத்து வெளிப்பாடானது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமையப் போவதில்லை.
இலங்கையில் இதுவரை காலமும் யுத்த அணர்த்த்துக்குள் வாழ்ந்து வந்த தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் மற்றும் தோட்டத் தொழிளாலர்களும் ஏனைய சமூகத்தவர்களும் மிகவும் சிக்கலான பல பிரச்சினைகளை தங்கள் வாழ்ந்துவரும் காலத்தில் எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் அனைவரின் வலிகளும் தீர்க்கப்படும் வகையில் புதிய அரசியல் தீர்வுத் திட்டமானது அமைய வேண்டும் இல்லையேல் தொடர் இரத்த ஆறு ஒடுவதை இலங்கையில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இந்த அரசியல் தீர்வு திட்டத்தில் ஒரு தரப்பினர் திம்புப் பேச்சுவார்தையின் அடிப்படையில் தீர்வுகாண்ப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர் இந்த திம்புப் பேச்சுவார்த்தை முனவைக்கப்பட்ட வேளையும் தற்போதைய சூழலும் ஒவ்வா முனையாக உள்ளமையை அத் தரப்பினர் புரிந்துகொள்வது இன்றியமையாத்தாகும்.
திம்புப் பேச்சுவார்த்தை 1985ம் ஆண்டு யூலை மாதம் 08ம் திகதி பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்புவில் இந்திய மத்திய அரசின் அனுசரனையுடனும் மேற்பார்வையுடனும் இலங்கையில் ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஐந்து இயக்கங்களின் கூட்டணிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் இலங்கை அரசின் சார்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெவர்தனாவின் சகோதர்ர் எச். டவ்ளியூ.ஜெவர்தானா கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் நாலு விடயங்கள் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன அவையாவன தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல், தமிழ் இனத்தின் தாயகத்தை அங்கீகரித்தல், தமிழ் தேசியத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.