This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

27 செப்டம்பர், 2009

வெளுக்கிறது கிழக்கு.!

உயிர்களை உருவாக்கும் பூமி
உயிராக இருக்கும் காற்று
மனிதனை உயிர் வாழச்செய்யும் மரங்கள்!
அந்த மரங்களுக்குள் ஒரு தீவு
அதுவே எம் தாய்பூமி

அன்பைக் காட்டுவதிலும் சரி அடித்துக் காட்டுவதிலும் சரி அதிக துணிச்சல்காரர்கள் பிறப்பெடுக்கும் பூமியும் இதுவே இயற்கை தன் அழகையெல்லாம் இத்தீவில் கொட்டியிருப்பதைப்போலவே பஞ்ச பூதங்களின் குணங்களும் இங்கு வாழ்பவர்களிடம் அப்படியே காணப்படுகின்றது.

ஆச்சரியக்குறிகள், கேள்விக்குறிகள், வியப்புக்குறிகள் என பலதரப்பட்ட வாழ்கையின் வடிவங்கள் இம்மக்களின் வாழ்கையாக இருக்கிறது. ஒவ்வொறு சிங்களக் குடிமகனின் வீட்டிலும் ஆகக்குறைந்தது ஒரு இராணுவ சிப்பாயின் புகைப்படத்திற்காவது மரியாதை செலுத்தப்படுகிறது. ஒவ்வொறு தமிழ் மகனின் வீட்டிலும் அடயாளம் தெரியாமல் மறைந்துபோன ஒரு உறவுக்காவது அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொறு முஸ்லிமின் விட்டிலும் ஒரு விதவை கனவனை நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். என்றாலும் இவர்களின் கண்களில் என்றுமில்லாதவாறு ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கவலை கலப்பில்லாத ஒரு சிரிப்பும் அவ்வப்போது வந்து மறைகின்றது.

மத அனுஸ்டானங்கள், திருவிழாக்கள் அவ்வப்போது புதிய நம்பிக்கையுடம் களைகட்டுகிறது அதில் கிழக்கில் மிகவும் விசேடமாக தமிழ் முஸ்லீம்களின் பாரம்பரிய அனுஸ்டானங்கள் மிகவும் சுதந்திரமான சூழலில் நடத்தப்படுகின்றன. மக்கள் எந்தப் பீதியும்மற்றவர்களாக கூட்டங்கூட்டமாக பக்திப் பரவசத்துடன் கலந்துகொள்கின்றனர். “சீயட துனாய், நூறுவாக்கி நாளு” (நூறு ரூபாயைக் கொடுத்தால் நாலு கிடைக்காது மூன்றுதான்) என சிங்கள வியாபாரிகளின் கூச்சல் காதைத் துளைக்கிறது. தொப்பியணிந்த தலைகள் வியாபாரத்திற்கு ஓதுக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். வீதியின் இருமருங்கிலும் உலகப் புகழ்பெற்ற இலத்திரனியல் கம்பனிகளின் விற்பனைக் கூடங்கள் முதல் இலவசமாக பால் வழங்கும் வீவா, கோர்லிக்ஸ் வரை அமர்களப்படுத்துகின்றனர்.

வீதிப் போக்குவரத்தும் மிகவும் சீரான நிலையில் நடைபெறுகின்றது. செங்கலடி தொடங்கி மஹ ஓயா சந்திவரையான கரடியனாறு, சின்னப் புல்லுமலை, மரப்பாலம், உறுகாமம், பெரிய புல்லுமலை மற்றும் கோப்பாவெளி போன்ற தமிழ் முஸ்லீம் கிராமங்களில் மூன்று தசாப்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆங்காங்கே யு.என்.எச்.சி.ஆர் என்று ஓட்டில் எழுதப்பட்டுள்ள வீடுகள் முலைத்துக் கொண்டிருக்கின்றன.
கரடியனாறு, மரப்பாலம் மற்றும் கிரான் போன்ற பிரதேசங்களில் மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக ஒக்ஸ்பாம் சிமெந்தும் கல்லும் வாங்கும் பணியில் தீவிரமாக உள்ளது. சர்வதேச தொண்டர் நிறுவனங்களில் பல தங்களாலான முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்கின்றனர். அதில் பல வித்தைக்காரர்கள் தங்கள் கைவித்தைகளை ஏழைகளுக்கு வழங்கும் நிவாரணப் பொருற்களில் காட்டுவதை கண்டுகொள்ள முடிகிறது. 

உதாரணமாக கூறுவதானால் உலக உணவுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசினால் நடாத்தப்படும் சிறுவர் பாடசாலைகளில் அங்கு கல்வி பயிலும் ஏழை மாணவ மாணவி சிறார்களுக்கு அரிசி, மா, போன்ற பொருற்கள் இலவசவாக வழங்கப்படுகின்றன இவ்வாறு காத்தான்குடிக்கு அண்மையிலிருக்கும் கர்பலா கிராமப் படசாலையில் பாலர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மற்றும் மாவை நோக்கியபோது அந்த அரிசி, புழுக்கள் நிறைந்ததாகவும் அந்த மா மிகவும் பழுதடைந்ததாகவும் காணப்பட்டது அதனைப் பெற்றுக்கொண்ட ஒரு பாலகரின் தாயிடம் அந்த மாவைப் பற்றி வினவியபோது அதில் சிலவற்றை தான் சமைத்ததாகவும் அது சாப்பிடமுடியாமல் கசப்புத் தன்மைகொண்டதாக இருந்ததால் அவற்றை வீசிவிட வேண்டி வந்ததாகவும் அந்த ஏழைத்தாய் தெரிவித்தார். பலகோடி செலவில் சிறுவர்களுக்கு உணவளிக்கும் இந்நிறுவனம் ஏன் இப்படிப்பட்ட உணவுப் பொருற்களை வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

பாலர்களை முதலாமாண்டுக்கு அனுமதிக்கும் விடயத்தில் தற்போது புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது அதன்படி சில மாதங்களுக்கு முன்னர் பாலர்களின் பெற்றோர் அவர்களை கல்விகற்க அனுப்பவிருக்கின்ற ஆரம்பப்படசாலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பரிசோதித்து அதை அந்த ஆரம்பப்படசாலையின் அதிபர் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே அந்தப் பாடசாலையில் பிள்ளையைச் சேர்க்க முடியும். இந்த புதிய கல்வியமைச்சின் நடைமுறையினால் தற்போது சில பாடசாலை அதிபர்கள் தாங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற ரேஞ்சில் நடந்து கொள்கின்றனர்.

பாலகர்களின் சகோதரன், சகோதரி அல்லது சௌந்தக்காரப் பிள்ளைகள் ஒரு குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் போது அதே பாடசாலையில் தங்களின் பிள்ளையைச் சேர்த்தால் அவர்கள் பாதுகாப்பாக பாடசாலை சென்றுவர வசதியாக இருக்கும் என நினைக்கும் பெற்றோர் அந்தப் படசாலைகளில் அனுமதிக்காக விண்ணப்பித்தால் கட்டாயமாக அந்தந்த அதிபர்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியவர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கிவிட்டு மற்றைய குழந்தைகளை நடுத்தெருவில் விடுகின்றனர் இதனால் பிள்ளை அடுத்த ஆண்டுவரை பாடசாலையில் சேர்வதற்காக காத்திருக்க வேண்டியேற்படுகின்றது. இத்தகைய நடைமுறையை கிராமிய பாடசாலை அதிபர்களை விட நகர்புற பாடசாலை அதிபர்கள் எந்த குற்றவுணர்வுமற்றவர்களாக சதாரணமாக மேற்கொள்கின்றனர்.

இன்று கையடக்கத் தொலைபேசி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரிடமும் கையடக்க தொலைபேசி காணப்படுகின்றது அதிலும் வடக்கு கிழக்கை டயலொக் ஜீ.எஸ்.எம் நிறுவனம் தன்கையில் வைத்துள்ளது என்றாலும் வடக்கு மக்களுக்கு சேவையை வழங்கும் நோக்கில் வடக்கில் தங்களின் நிறுவனத்தின் காரியாலயத்தை திறந்துள்ள டயலொக் நிறுவனம் மிகவும் சுமூக நிலையிலிருக்கும் கிழக்கை புறக்கணித்து எந்த ஒரு சேவைக் காரியாலயத்தையும் கிழக்கில் திறக்காமல் பாராமுகமாக உள்ளனர். இதனால் அதிகம் இந்நிறுவனத்தின் தொலைபேசிகளை பாவிக்கும் மக்கள் சிறிய சிறிய தேவைகளுக்காக்கூட குருநாகல் அல்லது கண்டிக்கு சில ஆயிரங்களை செலவு செய்து அவற்றை பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் சகல வீதிகளிலும் போக்குவரத்து விதிகளை கண்காணிப்பதற்காக போக்குவரத்துப் பொலிசார் மிகவும் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாகனங்களை சோதனையிட்டு அதில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ அல்லது குறித்த வாகனத்துக்குச் சொந்தக்காரர் அவ்வாகனத்திற்கான ஆவணத்தை எடுத்துச் செல்ல மறந்திருந்தாலோ அவற்றை எடுத்துவருவதற்கு எந்த அவகாசமும் வழங்காமல் உடனே பிரயாணிகளிடமிருந்து மிரட்டி லஞ்சப் பணம் பெறுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். பணம் மட்டுமிருந்தால் எத்தகைய விதியையும் மீறலாம் என்ற நிலை காணப்படுகின்றது.

வெளிநாட்டில் அதிக காலம் வசித்தவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்கள் என அதிகமானவர்கள் தற்போது இங்கு முதலீடு செய்வது தொழில்களை ஆரம்பிப்பது மற்றும் வீடுகளை வாங்குவது என மீண்டும் தங்களின் தாய் மண்ணில் காலூண்ட ஆரம்பித்துள்ளனர். யுத்தத்தின்பின் அரசினால் மிகப்பாரிய பொதுப்பணி அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலீஸ் இராணுவத்தின் மேலதிகாரிகளாக தற்போது இப்பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மனிதத்துடன் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக பொலிஸ் மற்றும் இராணுவ சிப்பாய்கள் பொதுமக்களை கண்ணியமாக நடத்துவதை பொதுவாகவே அவதானிக்க முடிகிறது.

யுத்தத்தினால் அனாதரவாக்கப்பட்ட பல குடும்பங்கள் சாப்படுக்கும் உடுபிடவைகளுக்கும் மிகவும் கஸ்டப்படுகின்றனர். இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற உதவியை மட்டுமே நூற்றுக்கு நூறுவீதம் நம்பிவாழவேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலை காணப்படுகின்றது. இவர்களின் போட்டோக்களைக் காட்டியும் இவர்களுக்கு உதவுவதாகக் கூறியும் வெளிநாடுகளில் அறவிடப்படும் எந்த நிதியுதவியும் அவர்களை வந்து சேர்வதாக தெரியவில்லை இங்கே வேலியே பயிரை மேய்கிறது. உதவிகள் நேரடியாக வழங்கப்படாதவரை அந்த மக்களின் வாழ்வில் தை பிறப்பது சாத்தியமில்லை.

தமிழ் மக்களிடம் அதிக செல்வாக்குடன் வளம்வரும் சக்தி தொலைக்காட்சி தோட்டத்தொழிளார்களின் வாழ்வு மிளிரவேண்டும் அவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஐந்நூறு ரூபா வாங்கித்தருவாதாக கூறி அவர்களின் ஊழைப்பில் வாழ்ந்து கொண்டு அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அரசியல் கட்சிகளையும் தொழில் சங்கங்களையும் தொடர்ந்து சாடிவருவதுடன் அவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனத்தை தொடர்ந்து மக்களுக்கு தொழுறித்துக் காட்டிவருகின்றது. மட்டுமல்லாமல் மின்னல் ரங்கா அன்று யுனிசெப்பிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார் அது யுத்தகாலத்தில் சிறார்கள் போராளிகளாக இணைவதற்கு எதிராக மிகவும் வலிமையாகப் போராடிய நீங்கள் ஏன் தோட்டக்காட்டு குழந்தைத் தொழிலாளர்கள் விடயத்தில் அக்கரை காட்டுவதில்லை என்று. இந்தவிடயத்தில் சக்திக்கு பாராட்டைத் தெரிவிக்கலாம்.

தோட்டத் தொழிலாளர்கள் என்ற நமது தமிழ்பேசும் சமூகம் அவர்கள் சார்ந்த தொழில்சங்கங்கள் மற்றும் கட்சிகளால் மிகவும் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர் இவர்களின் மீட்சி மகிந்த சிந்தனையிலும் நம் பத்திரிகைத்தரப்பாரின் சிந்தனையிலும் இல்லாதது வேதனை அளிக்கிறது
போராட்டம் போராட்டம் என்று கூவிய வாய்களும் எழுதிய பேனாக்களும் இனியாவது இந்த மக்களின் மீட்சிக்காக கூவ, எழுத முன்வருவார்களா?

ஓட்டை வீடு, அறைவயிற்றுக் கஞ்சி, நாள்முழுவதும் வேலை, ஒரு நாள் சாப்பிடப்போதாத சம்பளம், குடிபோதையில் குடியான், வீட்டுவேலைக்கு சென்றுள்ள பதினெட்டுவயது மகள், சைவக்கடையில் தட்டுக் கழுவும் எட்டுவயது மகன், பட்டினிகிடந்து சேர்த்த சேகரிப்பை மாதாமாதம் உறிஞ்சிக் கொண்டு பெஜிரோவில் திரியும் தொழில்சங்கத் தலைவர், வைத்தியத்திற்காக அவசரமாக எடுத்துச் செல்ல வீதியில்லாமையால் இறந்துபோன பேரனின் போட்டோவுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறாள் அந்த நடுவயதுத் தாய்.

இது தோட்டத் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதியல்ல அவர்களை சுற்றியுள்ள சதி மீட்சிக்கு அந்த இயசு வந்தாலும் முடியுமா? என்பதுதான் இன்றைய கேள்வி.
கேள்விக் குறியாக வலைந்து அவர்கள் சுமந்துகொண்டிருப்பது தேயிலையை அல்ல அவர்களின் வாழ்கையை.
ஆக்கம் -கிழக்கான் ஆதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக