“நான் மன ஊடூடாப் பிச்சையெடுத்து ஒவ்வொறு வெள்ளிக்கிழமையும் சேர்ர காச சிலிங்கோ வங்கிலதான் போட்ட. என்ட கஷ்டத்துக்குள்ள இரிக்கிறத்துக்கு ஊடுமில்ல.ஒரு குடிலக் கட்டுவம் என்டும் அதோட என்ட மையத்த (பிணத்தை) அடக்க மத்தாக்களக் கஷ்டப்படுத்தப் போடாண்டுதான் இந்தக் காச நான் சேர்த்து வந்த..மொத்தமா கடசியா என்ட கணக்கில 78,086.93 சதம் நான் வெயிலுக்குள்ள அலஞ்சி திரிஞ்சி சேர்த்த காசி இருந்திச்சி. இந்தக் காசச் சேர்க்க நான் பட்ட பாடு அல்லாஹ் ஒருத்தனுக்குத்தான் தெரியும். இப்ப என்னடான்டா வங்கியே இல்ல, இதுல சட்ட நியாயமில்லையா? இப்பிடி ஏழைகள்ற காச எடுத்தவனுகளுக்குப் புள்ள குட்டிகள் இல்லையா? பரம்பரைக்கும் அல்லாட சாபம் எறங்கும் இவனுகளுக்கு....... அல்லா ஒருத்தன் இரிக்கான்.......... அவன் பார்த்துக்குவான்” –அவ்வா உம்மா-
கிழக்கு முஸ்லீம்களின் பொருளாதார பலத்தை அப்படியே சாய்த்துவிட பல கொள்ளைச் சம்பங்கள் கடந்த காலங்களில் ஆயுதம் தாங்கிய புலிகள் ஏனைய இயக்கத்தினர்கள் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் என பலர் தங்களின் கைவரிசையை கிழக்கு முஸ்லீம்களின் பணத்தின் மீதும் சொத்துக்கள் மீதும் காட்டியே வந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு கொல்லையின் நவீன வடிவமே இதுவும். ஆனால் கத்தியின்றி இரத்தமின்றி மு(வி)ளித்திருக்கும்போது முண்டையை தோன்டிய கதை இது.
2002 ம் ஆண்டு மே மாதம் வரையறுக்கப்பட்ட சிலிங்கோ முதலீட்டுக் கூட்டுத்தாபனத்துடன் இணைத்து சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டுக் கூட்டுத்தாபனம் (Ceylinco Profit Sharing Investment Corporation Ltd) அமைக்கப்பட்டது. இதன் பிரதான நிறைவேற்று அதிகாரியாக முஹம்மட் ராஸிக் நியமிக்கப்பட்டார். இது இஸ்லாமிய அட்டிப்படைச் சட்டமான ஷரீஆ சட்டத்துக்கு அமைவான ஒரு அமைப்பு என கூறப்பட்டு அதற்காக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அதற்கமைய இஸ்லாமிய மக்கள் மத்தியில் வட்டியில்லாத நிதி நிறுவனமாக இது அறிமுகம் செய்யப்பட்டு இலாப பங்கு என்ற ரீதியில் இதில் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என பிரச்சாரப்படுத்தப்பட்டது.
இதன் தலைமையகம் கொழும்பு பம்பலப்பிட்டி மெல்போன் அவன்யூ இலக்கம் 01ல் இயங்கியது இதன் கிளைகள் இஸ்லாமியர்கள் அதிமாக வாழும் ஊர்களில் அமைக்கப்பட்டன. பிரதானமாக கிழக்கில் அமைக்கப்பட்டது அதன் ஒரு கிளை காத்தான்குடியில் மிகவும் கோலாகலமாக அப்போதைய இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக சிலிங்கோவின் அதிபர் லலித்கொத்தலாவல வந்து திறந்துவைக்க பெருமையுடன் திறந்துவைக்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகளினால் மகிழ்ச்சியடைந்த இஸ்லாமியர்கள் மற்றும் ஏனைய மக்கள் அனைவரும் இணைந்து இந்த நிறுவனத்தில் தங்களின் பணத்தை முதலீடு செய்தனர் இதில் படித்தவர்கள், பாமரர்கள், பரம ஏழைகள், விதவைகள், பிச்சைக்காரர்கள், அனாதைகள் என அனைவரும் இணைந்து 850 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது. இதில் 11,000 இஸ்லாமியர்களும் ஏனையவர்களுமாவர்.
இந் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் பணத்தையிட்டவர்கள் தங்களுக்கான இலாபப் பங்குகளோ அல்லது பணத்தையோ மீளப்பெறச் சென்றபோது அது முடியாது போகவே இந்நிறுவனத்தின் சுயரூபம் வெளியில் வர ஆரம்பித்தது
கோல்டன் கீ கிரட்டிக் காட் மோசடியில் சிலிங்கோ நிறுவனம் சிக்கி தள்ளாடிக்கொண்டிருக்கும்போது திட்டமிடப்பட்டு இந்நிறுவனத்திலும் இருந்த நிதி அதன் உத்தியோகஸ்தர்களாலும் இன்னும் சிலராலும் மோசடி செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
இச்சம்பம் வெளிச்சத்துக்கு வந்தபோது கிழக்கு மக்களுக்கு ஒரு செய்தி இடியாக இருந்தது அந்தச் செய்தி கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாஹ்வும் அவரது மனைவியும் இந்நிறுவனத்திலிருந்து பல மில்லியன் ரூபாய்களை (67.5 மில்லியன்) மோசடி செய்ததாக சன்டே லீடர் ஆங்கிலப்பத்திரிகை ஆதாரங்களுடன் அல்ஹாஜ் ஹிஸ்புல்லாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. ( This week- Hizbullah in the dock [13.09.2009 The Sunday Leader]) ஹிஸ்புல்லாஹ் அவரின் மனைவியின் கம்பனிகளுக்காக தானது சொந்த உத்தரவாதத்தின் பெயரில் 67.5 மில்லியன் ரூபாய்கள் கடன் பெற்றுக் கொண்டு அதைச் திருப்பிச் செலுத்தாமையாகும். இந்தக் காலப்பகுதியில் ஹிஸ்புல்லாவின் மனையின் கம்பனிகள் என்று கூறப்பட்ட கம்பனிகள் நஷ்டமடைந்து செயலிலந்துவிட்டதாக அதன் நிர்வாகம் அறிவித்திருந்த்து. மட்டுமல்லாது ஹிஸ்புல்லாஹ் தனது மனைவியின் பெயரில் நிறுப்பட்ட நாலு நிறுவனங்களுக்கு கடன் வழங்குமாறு சிலிங்கோ புரெபிட் ஷெயாரிங் நிறுவனத்துக்கு வழங்கிய உத்தரவாதக் கடிதத்த்தின் பிரதிகளையும் அது வெளியிட்டது அத்துடன் இது தொடர்பாக ஹிஸ்புல்லாவிடம் கேள்விகளைக் கேட்டு அவர் அளித்த பதிலையும் வெளியிட்டது.
ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வழங்கிய உத்தரவாதக்கடிதத்தில்
“திருமதி சித்தி றமீஸா சகாப்தீனை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவருக்கு 12 மில்லியன் ரூபாக்களை கடனாக வழங்கும்படி பரிந்துரை செய்வதற்கும் உத்தரவாதமளிப்பதற்கும் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை. திருமதி றமீஸா சகாப்தீன் அல்லது வரையறுக்கப்பட்ட செரந்தீப் உற்பத்தியாளர் நிறுவனம் இத்தொகையை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அல்லது தவறும் பட்சத்தில் 7 தினங்கள் முன்னறிவித்தலில் 12 மில்லியன் ரூபாய்களையும் தாமதப் பணத்தையும் செலுத்துவதற்குப் பொறுப்பேற்று உறுதி செய்கிறேன்” இதனைச் சுட்டிக் காட்டிய சன்டே லீடர் பத்திரிகை இக்கம்பனி செயலிலக்கும் பட்சத்தில் தங்களிடம் இக் கடன்தொகையை செலுத்த சக்தியிருந்த்தா எனக் கேட்க அதற்கு இல்லையென பதில் அளித்த அமைச்சர் நல்லெண்ணத்தின் பெயரில் தான் உத்தரவாதம் வழங்கியதாகவும் தனது மனைவியின் நிறுவனங்கள் சிலிங்கோவின் ஒரு அங்கம் என்பதால் அதன் இலாபம் இவர்களை சார்ந்ததாக இருந்தது என்றும் பதிலளித்தார்.
இந்நிலையில் 93 மில்லியன்கள் ஹிஸ்புல்லாஹ் இந்நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய நிலையில் 5 மில்லியன்களை மட்டும் செலுத்தியுள்ளார் ஹிஸ்புல்லாஹ். இப்பணத்தை திருப்பிச் செலுத்தும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டதற்கு “அவை எல்லாமே நஷ்டமடைந்து விட்டன எதற்காக நான் திருப்பிச் செலுத்தவேண்டும் என்றார் அவர்.
குறிப்பிட்ட நான்கு கம்பனிகளும் வரையறுக்கப்பட்ட சரந்தீப் மெனுஃபக்ச்சார்ஸ் லங்கா, வரை.ஹெப்பி டே லங்கா, வரை. கிறீன் ப்ளவர்ஸ் எம்.எப்.ஜி, வரை. க்ளொத்திங் லங்கா ஆகிய பெயர்களில் இயங்கி திவாலாகி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறு ஏழைகளின் பணம் ஒரு பக்கம் கொள்ளையிடப்பட்டு இருக்கையில் இதற்கு பல பின்னிகள் இருந்திருக்கின்றன. சிலிங்கோ புரபிட் ஷெயாரிங்கிங் நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஜனாப். றபீக் அவர்களே ஹிஸ்புல்லாவின் மனைவியின் கம்பனிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அத்துடன் ஜம்மியத்துல் உலமா சபையில் இந்நிறுவனத்திற்கான இஸ்லாமிய சட்ட ஆலோசனை சபையும் இந்நிறுவனத்தின் தவறான போக்குகளை மக்களுக்கு சொல்லாமல் 2005ம் ஆண்டு அப்படியே பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது அத்துடன் அதில் முக்கிய பொறுப்பிலிருந்த பலர் சிலிங்கோ கூட்டு நிறுவனத்தில் பல வட்டியுடனான கடன்களைப் பெற்று அதனை செலுத்தாமலும் உள்ளனர்.
இந்த வகையில் ஜனாதிபதியின் அலோசகராக இருக்கும் என்.எஸ் முஹம்மட் என்பவரும் இந்நிறுவனத்திடம் மே மாதம் 2006ம் ஆண்டு 6.5 மில்லியன் கடனாகக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவருக்கு அன்பளிப்பாக 6.5 மில்லியன் காசோலை வழங்கப்பட்டதாக கோசொலைக் பிரதியை சன்டே லீடர் வெளியிட்டிருந்தது. ஆக இவர் கடன் கேட்டிருக்கிறார் இந்தப் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அது எவ்வாறாயினும் இதுவரை ஒரு சதம் கூட அவர் திருப்பிச் செலுத்தவில்லை இவர் இலங்கை ஜம்மியத்துல் உலமாவில் அமைக்கப்பட்ட ஷரிஆ சபையின் பணிப்பாளராவார்.
அத்துடன் இந்நிறுவனத்தில் பலபொறுப்பான பதவிகளை வகித்தவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு காத்தான்குடி-கொழும்பை வசிப்பிடமாக்கொண்ட ஒருவர் அகதி அந்தஸ்த்து கோரி பிராண்ஸில் இருக்கிறார்.
இவ்வாறு பலர் தாங்கள் திட்டமிட்டபடி சந்தர்பத்தைப் பயன்படுத்தி பணத்தைகொள்ளையிட்டுவிட்டு நிம்மதியாக வாழ்கின்றனர். ஆனால் இதில் பணத்தை வைப்பிலிட்ட சில ஏழைகள் மனநோயாளர்களாகவும் இன்னும் சிலர் மரடைப்பாலும் மரணமடைந்தும் விட்டனர். பல இலட்சங்களை இழந்த வியாபார முதலாளிகள் தினக்கூலிகளாக தற்போது வேலைசெய்கின்றனர்.
இந்நிறுவனத்திற்கான புதிய நிர்வாகசபை அமைக்கப்பட்டு அவர்கள் இந்த கொள்ளைகள் தொடர்பாக ஆராயமுற்பட்டபோது ஹிஸ்புல்லாஹ் தொடக்கம் பணம் கடன் வழங்கப்பட்ட சிலரின் உண்மையாண ஆவணங்களை அந்நிறுவனத்தில் காணவில்லை சில கடிதங்களும் போட்டோக்களுமே ஆதாரமாக உள்ளன என்பதும் இன்னும் திடுக்கிடும் தகவல்.
இந்த ஏழைகள், விதவைகள், பாமரர்கள் வைப்பிலிட்ட பணங்கள் அரசியினால் பாதுகாப்பானது என அறிவிக்கபட்டிருந்த பெரிய நிறுவனங்களிலேயே முதலீடு செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் அரசோ! மத்திய வங்கியோ! ஜம்மியத்துல் உலமாவோ! அல்லது வேறு எவரோ இது தொடர்பாக கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
காத்தான்குடி, ஆரயம்பதி, மட்டக்களப்பு, கல்முனை, சம்மாந்துறை என சகல ஊர்களையும் சேர்ந்த பெரும்பாலான ஏழைகள் பணங்களை இழந்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக வீதிகளில் திரிகின்றனர். ஆனால் அதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்பவர்கள் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் உல்லாசக் வாகனங்களில் வலம் வருகின்றனர்.
செம்டம்பர் மாதம் 11ம் திகதிய நவமணிப்பத்திரிகையில் இந்நிறுவத்தினால் பாதிக்கப்பட்டோர் அமைப்பு “தாஜூல் மில்லத் அல்ஹாஜ் ஹிஸ்புல்லாஹுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு கடிதம் வெளிவந்திருந்திருந்தது அதில்
“தாங்கள் பெற்றுக் கொண்ட கடன் தொகைகளுக்கான உண்மை ஆவணங்கள் இல்லை என்று நினைத்து நீங்கள் உண்மைக்குண்மையாக பெற்ற கடனைச் செலுத்தாமல் இருக்க வேண்டாம். எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவனைப் பயந்து நடப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.
நாங்கள் சேர்த்த பணத்தை திருப்பிப் பெறுவதற்காக இந்த நிறுவனத்தின் எல்லா அதிகாரிகளையும் சந்தித்து விட்டோம். உங்கள் ஊரில் உள்ளவர்கள் தான் எடுத்த பண்த்தைக் கட்டினால் உங்களது பணத்தைத் தந்துவிடலாம் என்றுதான் சொல்கிறார்கள். இதனால் இந்தப் பிரசுரத்தை வெளியிடவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இதில் அரசியல் காரணங்கள் எதுவுமில்லை. இதை யாரும் அரசியலாகப் பார்க்கவேண்டியதுமில்லை. நாம் எல்லோரும் மௌத்தாக வேண்டியவர்கள், அல்லாஹ்விடம் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். எனவே பல முஸ்லிம்களது கண்ணீரை முன்வைத்து இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் செலுத்தக் கேட்கிறோம்.
உங்களது மனைவி இப்பணத்தை செலுத்தாதவிடத்து நான் கட்டுவேன் என்று நீங்க்ள அளித்த வாக்குறுதி நாங்கு கடிதங்களில் இருக்கிறது. இந்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றும் பட்சத்தில் காத்தான்குடி மக்களின் மனதில் என்றும் அழியாத இடத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
ஏழைகளின் கண்ணீரும் அநியாம் இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையும் அல்லாஹ்வின் அர்ஷ் (கடவுளின் சமஸ்தானம்) வரை செல்லக் கூடியது. இந்த விடயத்தில் பரிதவிக்கும் மக்களது கண்ணீரைத் துடைக்க வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
எனவே அல்லாஹ் ரஸூலுக்காக நீங்கள் செலிங்கோ நிறுவனத்துக்கு கட்ட வேண்டிய 93 மில்லியன் ரூபாய்களையும் திருப்பிச் செலுத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என்று அக்கடிதம் முடிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோர் அமைப்பு அண்மையில் நீதிக்கோரி போராட்டம் நடாத்தியது அதன் வீடியோப் பதிவை வீரகேசரி உட்பட பல நாளேடுகளும் செய்தியாக வெளியிட்டன.
நான் அந்த வழியால் தற்செயலாக வந்தபோது ஒரு ஆர்பாட்டம்போன்ற பேரணி நடப்பதைக் கண்டு மூக்கை நுழைத்தேன் விடயம் இதுதான் அங்கு இதில் ஈடுப்ட்டிருந்தவர்களில் எனக்கு படித்துத்தந்த ஆரியர்கள் சிலரும் காத்தான்குடியின் தற்போதைய காதி நீதிபதியும் அப்போதைய எங்கள் பாடசாலை அதிபருமான மஃறுப் கரீம் சேர் அவர்கள் பதாதையை எந்தியிருந்த்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த அதிபர் நிர்வாகத்திற்கு மிகவும் புகழ்பெற்றவர் சிறந்த கல்விமான் இவரை வீதிக்கு வரவைத்தது என்னையும் சுட்டது.
இந்தப் பகல் கொள்ளையில் வெறுமனே கிழக்குமாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவை மட்டும் குற்றம் காண முடியாது அவர் கடன் பெற்றிருந்தால் அதைச் திருப்பிச் செலுத்தவேண்டும் காரணம் அது ஏழைகளின் அவரது மக்களின் பணம்.
ஆனால் இந்தக் கொள்ளையின் பின்னால் பல உண்மைகள் மறைந்து காண்ப்படுகின்றன. பல அதிகாரிகள் அங்கத்தவர்கள் நிர்வாகிகள் பணங்களைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டியுள்ளனர் இது தொடர்பாக அரசாங்கம் பாரபச்சமற்ற விசாரனையை நடத்த வேண்டும் இந்நிறுவத்தில் பணிபுரிந்தவர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் மக்களின் வேண்டுகோளின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். வெளிநாட்டில் பதுங்கியுள்ளவர்கள் இன்டபோலின் உதவியுடன் கைது செய்யப்படவேண்டும்.
ஆனால் சட்டரீதியாக இந்த அமைப்பு முறையான பதிவுகளுடன் நிதி நிறுவனமாக மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் இலங்கை நிதி நிறுவனச் சட்டங்களுக்கு இது உட்படவில்லை என்பதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு தடையாக நிற்கிறது.
அடுத்து இதில் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படும் அனைவரும் அரசியல் சமூக மற்றும் பணரீதியில் மிகவும் வலுவானவர்கள் இவர்களை எதிர்த்து எழுதுவதற்கும் நிதிதுறையை நாடுவதற்கும் வழக்கறிஞர்கள் முதல் பொலிஸ் வரை பயப்படுவதாகத் தெரிகிறது. சில வழக்கரிஞர்கள் நீங்கள் இத்தனை இலட்சம் தந்தால் பணத்தை மீட்டுத் தருவோம் என பேரம் பேசுகின்றனர். இந்த நிலையானது மரத்தால் விழுந்தவனை மாடேரி மிதித்த கதையாகவே உள்ளது.
பண, அரசியல் பலத்திற்குப் பயந்த சகல உத்தியோகத்தர்களும் அடக்கிவாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே காத்தான்குடியில் அரசியல் ஊழல்களை அம்பலப்படுத்திய வாரப் பத்திரிகையின் பத்திரிகையாசிரியர் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது கொழும்பில் வேறு ஒரு பத்திரிகையை நடாத்திவருகின்றார்.
இந்நிலையில் இந்த மக்களின் கண்ணீரை துடைப்பதாயின் யாராவது ஒரு சட்டத்தரணி வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்க முன்வராதவரை இம் மண்ணில் யாரும் குற்றவாளிகள் இல்லை.
இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு இதில் பாரிய பொறுப்பு உண்டு அவர்களும் இந்தப் பாதிக்கப்ட்ட மக்களின் கண்ணீரை துடைக்க தங்களால் முடிந்த எதையும் இதுவரை செய்யாமல் இருப்பது மக்களுக்கு வியப்பளிக்கின்றது.
சட்டப்படி இவர்கள் தப்பிக்க நினைக்கிறார்கள் முடியும். சட்டம் மக்களுக்காக மக்கள் வகுத்தது ஆனால் ஏழையின் கண்ணீரில் இறைவனைக் காணலாம் என்றான் ஒரு கவிஞன்.
காத்திருக்கிறார்கள் பல நூறு ஏழைகள் யார் இந்தப் பூனைக்கு மணிகட்ட வருவார் என்று.
“நான் உம்றாவுக்குப் போறத்துக்கிண்டு (மக்காவுக்கான புனித யாத்திரை) சேர்த்த காச இஸ்லாமிய வங்கியெண்டு சொன்னதால நான் சிலிங்கோ வங்கியில போட்டுவந்தன் காசி என்டா எல்லோரும் கஸ்டப்பட்டுத்தானே உழச்சிச் செக்கிற. அப்பித்தான் நானும் உம்ரா ஹாஜத்தோட சேர்துக்கிட்டு வந்தன் வங்கிய மூடிப்போட்டு போயிட்டாங்கன்டு இப்ப சனங் சொல்லுது.... அல்லாஹ் இப்படியம் செய்யலாமா? பட்டப்பகல்ல கண்ணத் தோண்டுற மாதிரி வேலயலவா இது? நாசமாப் போனவன்னுகள்ற கண்கெட்டுப் போகும். இந்த நோம்பப் புடிச்சிக்கிட்டு நான் அல்லாஹ்கிட்டப் பாரம் குடுத்திரிக்கன். ஹரவாப் போவானுகள்.....இப்பிடி எத்தனை பேர ஏமாத்தியிருக்கானுகளோ? -ஹலீமா உம்மா-
(தகவல் மற்றும் ஆதாரங்களுக்காக- பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களும், நவமணி மற்றும் சன்டே லீடர்)
காத்தான்குடியிலிருந்து
கிழக்கான் ஆதம்.
19.11.2009.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக